கயத்தாறு அருகே கிராமமக்கள் தர்ணா போராட்டம் தெருவில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிக்கை

கயத்தாறு அருகே, தெருவில் தனிநபர் ஆக்கிரமிப்பால் பேவர் பிளாக் பதிக்கும் பணி தடைபட்டுள்ளதை கண்டித்தும், தனிநபர் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி அரைகுறையாக நிற்கும் பணியை முழுமையாக முடிக்க வலியுறுத்தியும் நேற்று கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு அருகே கிராமமக்கள் தர்ணா போராட்டம் தெருவில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிக்கை
Published on

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, தாலுகாகுப்பனாபுரம் பஞ்சாயத்தில் ஓட்டுடன்பட்டி கிராமத்தில் கடந்த 60 ஆண்டு காலமாக சாலை வசதிகள் இல்லாமலும், தெருக்கள் குண்டும் குழியுமாக கிடந்தது. இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான கடம்பூர் ராஜூவிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். உடனடியாக, அந்த கிராமத்திற்கு புதிய பேவர்பிளாக் சாலையும், அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை அமைக்கவும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை அமைச்சர் ஒதுக்கினார்.

தனிநபர் ஆக்கிரமிப்பால் பிரச்சினை

இதற்கான பணியை, கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் தந்தூரி தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். அந்த பணி விறுவிறுப்பாக நடந்தது. சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், குறிப்பிட்ட பகுதியில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பணியை முடிக்க விடாமல் தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தெருக்களில் பேவர்பிளாக் பதிக்கும் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், போலீசாரிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கிராமமக்கள் போராட்டம்

இதை தொடர்ந்து, கிடப்பில் போடப்பட்ட பணியை மீண்டும் செயல்படுத்தி முழுமையாக நிறைவேற்றக்கோரியும், பணிகளை தொடர தடையாக இருக்கும் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், நேற்றுகாலை 8 மணிக்கு அப்பகுதி மக்கள் சாலையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இனியும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனிநபரின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோவில்பட்டி தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குடியிருப்பு போராட்டங்கள் நடத்தப்படும் என்று கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com