வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

ஏமனூரில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
Published on

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சிக்குட்பட்ட ஏமனூர் பகுதியில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி கிழக்கு ஏமனூர், மேற்கு ஏமனூர், அருந்ததியர் நகர், ஆத்து மேட்டூர், தோழன் காட்டுவளவு, சிங்காபுரம், கொங்கரப்பட்டி, குளிப்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைத்து தரப்பட்டது. ஆனால் இதுவரை பஸ் வசதி செய்து தரவில்லை.

இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால் டாக்டரோ, செவிலியர்களோ கிடையாது. இந்த பகுதி மக்களுக்கு விவசாய நிலத்திற்கோ, வீட்டிற்கோ பட்டா வழங்கப்படவில்லை. ஏமனூர் பகுதி காவிரி ஆற்றங்கரையில் தீவு போல் தனித்து இருப்பதால், இங்கு பணியாற்ற அரசு பணியாளர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.

இந்த கிராமங்களில் மீன்பிடித்தல் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்தல் பிரதான தொழிலாக உள்ளது. செவிலியர்கள் நியமிக்காததால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் ஏமனூரில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏரியூர் செல்ல வேண்டி உள்ளது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தும், நேற்று கிராமமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏமானூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

சுகாதார நிலையத்திற்கு டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும். கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வீடுகள், நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் ஏமனூர் பகுதி மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, அரசின் இலவச ஆடு, மாடுகள், மத்திய, மாநில அரசு மானியத்தில் வீடுகள், கழிப்பிட வசதி செய்து தராமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். இதனை கண்டித்து வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு முன்னோட்டமாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com