விழுப்புரம் - கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.33 கோடியில் தடுப்பணை கட்டும் பணி

விழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.33 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
விழுப்புரம் - கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.33 கோடியில் தடுப்பணை கட்டும் பணி
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் - கடலூர் மாவட்டங்களில் சுரங்கப்பணிகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையொட்டி விழுப்புரம்- கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 மாவட்ட எல்லைப்பகுதிகளான சின்னகள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றின் குறுக்கே கனிமவளத்துறை மூலம் தடுப்பணை கட்ட ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இதனை தொடர்ந்து சின்னகள்ளிப்பட்டு- கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. விழாவில் தமிழக சட்டம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி தடுப்பணை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

அதன் பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1 லட்சம் பேர் பயன்

இங்கு கட்டப்பட இருக்கும் தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் ஆகும். கொள்ளளவு 28.58 மில்லியன் கனஅடியாகும். தடுப்பணையின் உச்சபட்ச வெள்ளநீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 1,51,320 கன அடியாகும். இந்த தடுப்பணையின் மேற்புறம் 1,500 மீட்டர் தூரமும், கீழ்புறம் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வெள்ளத்தடுப்பு கரைகள் அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் சின்னகள்ளிப்பட்டு, சேர்ந்தனூர், அரசமங்கலம், தென்குச்சிப்பாளையம், வடவாம்பலம், குச்சிப்பாளையம், நரசிங்கபுரம், பூவரசங்குப்பம் ஆகிய கிராமங்களும், கடலூர் மாவட்டத்தில் கண்டரக்கோட்டை, அக்கடவல்லி, பெரியகள்ளிப்பட்டு, பூண்டி, புலவனூர், மேல்குமாரமங்கலம், ஏரிப்பாளையம், குரத்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என 1 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

விவசாய உற்பத்தி அதிகரிக்கும்

மேலும் இதன் மூலம் 728 குழாய் கிணறுகள் பயன்பெறும். அதுமட்டுமின்றி தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு அதன் நீர்மட்டம் வெகுவாக உயரும். விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும். குடிநீரின் தரமும் உயரும். ஏற்கனவே விழுப்புரம் அருகே தளவானூரில் தடுப்பணை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றிலும், மலட்டாற்றிலும் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளுக்கு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மழைநீர், கடலில் சென்று வீணாவதை தடுக்கும் வகையில் சிறப்பான திட்டங்கள் இந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் விழுப்புரம் அண்ணாதுரை, கடலூர் சந்திரசேகர் சாகமூரி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், பாண்டியன், சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி. அருண்மொழித்தேவன், ஆவின் தலைவர் பேட்டை முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ் குமரன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டுசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அற்பிசம்பாளையம் குமரேசன், மிட்டாமண்டகப்பட்டு முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com