விழுப்புரம் மாவட்டத்தில்: கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில்: கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா
Published on

விழுப்புரம்,

இணையதள அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், மாவட்ட மாறுதல் உத்தரவுகளை வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி மடிக்கணினி, சிம்கார்டு ஆகியவற்றையும், நவம்பர் 8-ந் தேதி கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம கணக்குகளையும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கடந்த மாதம் 12-ந் தேதி தாலுகா தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், 28-ந் தேதி முதல் பிறப்பு, இறப்பு பதிவு, பட்டா மாறுதல் உள்ளிட்ட ஆன்-லைன் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பணிகளை புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து அடுத்தகட்ட போராட்டமாக நேற்று தமிழகம் முழுவதும் 441 தாலுகா அலுவலகங்களின் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள், இரவுநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் தாலுகா அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தினுள் அமைந்துள்ளதால் தாலுகா அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவதற்கு பதிலாக கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இதில் வட்ட தலைவர் லட்சுமணன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் கமலநாதன், அமைப்பு செயலாளர் உத்திரவேல், இணை செயலாளர் உமாபதி, துணைத்தலைவர் சுமதி, மகளிர் அணி செயலாளர் மீனாட்சி, நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், செந்தமிழ்செல்வன், ராஜி, பாரதிதாசன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. மறுநாள் காலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் லோகேஷ் தலைமையிலும் மாவட்ட இணை செயலாளர் பொன்.கண்ணதாசன், வட்ட செயலாளர் பார்த்திபன், பொருளாளர் விமல், இணை செயலாளர் ஜெகன், பாரதிராஜா ஆகியோர் முன்னிலையிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னசேலம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். வட்ட தலைவர் ரஞ்சித்குமார், வட்ட செயலாளர் நாகராஜ், துணை தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட துணை செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

சங்கராபுரத்தில் வட்ட செயலாளர் வரதராஜன் தலைமையில், வட்ட தலைவர் முருகன் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதேபோல் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், கண்டாச்சிபுரம், திண்டிவனம், மரக்காணம், வானூர், கள்ளக்குறிச்சி ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com