விநாயகர் கோவிலில் மீண்டும் சாமி சிலை உடைப்பு

சேந்தமங்கலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் மீண்டும் சாமி சிலை உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்டிட மேஸ்திரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விநாயகர் கோவிலில் மீண்டும் சாமி சிலை உடைப்பு
Published on

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியில் விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவில் அருகே ஒரு அரச மரத்தை சுற்றி கான்கிரீட் தளம் போடப்பட்டிருந்தது. அங்கு உட்கார்ந்து 2 பேர் மது குடித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கோவில் அருகே மது குடிக்க கூடாது என அப்பகுதியை சேர்ந்த சிலர் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கடந்த 14-ந் தேதி இரவு கோவிலில் இருந்த நவகிரக பீடத்தில் வைக்கப்பட்டிருந்த 9 சிலைகளில் 4 சிலைகளை உடைத்து அருகில் இருந்த கிணற்றில் வீசி எறிந்தனர். இது தொடர்பாக தர்மகர்த்தா மற்றும் பொதுமக்கள் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விநாயகர் கோவிலுக்கு குடிபோதையில் வந்த ஒருவர் செங்கலை எடுத்து கோவில் மீது வீசியுள்ளார். நவகிரக பீடத்திலிருந்த 5 சிலைகளில் ஒரு சிலையை உடைத்து அகற்றிவிட்டு, மீண்டும் அங்கேயே போட்டு சென்றுவிட்டார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கோவில் சிலைகளை உடைத்தது அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரிகளான முருகன், மணி, மனோகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே விநாயகர் கோவிலில் பாதுகாப்பு கருதி நுழைவு வாயிலில் பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும் கோவில் அருகே மது குடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சேந்தமங்கலம் அருகே விநாயகர் கோவிலில் சாமி சிலை மீண்டும் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com