தேர்தல் நடத்தை விதிமீறல், அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 11 பேர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல், அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது. அன்றையதினமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சுவற்றில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்களை அவர்களே வர்ணம் பூசி அழிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் அகற்றாத சின்னங்கள், விளம்பரங்களை உள்ளாட்சி அமைப்புகளே வர்ணம் பூசி அழித்தது.

அதேபோல் அரசியல் கட்சியினருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, தேர்தல் விளம்பரங்களுக்கு உரிய அனுமதி பெற வேண்டும். வாகனங்களில் கட்சிக்கொடி கட்டக்கூடாது, சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தேர்தல் ஆணையம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசியல் கட்சியினரின் வாகனங்களில் கட்சிக்கொடியை கட்டி வைப்பது, சுவர் விளம்பரம் செய்வது போன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தன. அதையடுத்து போலீசார் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி கார்களில் கட்சிக்கொடி கட்டியதாக 7 பேர் மீதும், சுவர் விளம்பரம் செய்ததாக 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் மீதும், தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் மீதும், பா.ம.க.வை சேர்ந்த ஒருவர் மீதும், தே.மு.தி.க.வை சேர்ந்த ஒருவர் மீதும், அ.ம.மு.க.வை சேர்ந்த 5 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகள் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com