விருத்தாசலம் அருகே நடந்த, கல்லூரி மாணவி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

விருத்தாசலம் அருகே நடந்த கல்லூரி மாணவி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருத்தாசலம் அருகே நடந்த, கல்லூரி மாணவி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
Published on

சேத்தியாத்தோப்பு,

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆளும் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் சாதகமாக செயல்பட்டு வரும் தலைமை தேர்தல் அதிகாரியை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு மாற்றி, நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும்.

கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து சென்றுள்ளனர். எதற்காக அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

பொன்பரப்பியில் 46 இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டு, தற்போது 13 இடங்களில் மட்டும் தேர்தல் நடத்துவது ஏன், மீதமுள்ள 33 இடங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுவது எப்போது? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் மீதான தீர்ப்பை ஆளுநருக்கு பரிந்துரை செய்தும், விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கான காரணம் தெரியவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் தலித் இனத்தவரை கட்டி வைத்து தாக்கியவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

குச்சிப்பாளையம் கிராமத்தில் தலித் இனத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அவரது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு விளை நிலத்துக்கு சென்ற போது, அந்த மோட்டார் சைக்கிளில் எனது படமும், அம்பேத்கர் படமும் ஒட்டப்பட்டிருந்ததை கண்ட பா.ம.க.வினர் அந்த வாலிபரை தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் ஈடுபட்டதாக கூறி பா.ம.க. தலைவர் ராமதாஸ் நாடகமாடுகிறார்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட திலகவதி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். உறவினர்களே இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருந்தும், விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதேபோன்று தலித் மக்கள் மீது தொடர்ந்து பழிசுமத்தினால் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் நிர்வாகிகள் தாமரைச்செல்வன், அரவாழி சரவணன், தமிழ்மணி, முருகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com