விருதுநகர் மாவட்டத்தில் 6 பள்ளிகள் தரம் உயர்வு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 6 பள்ளிகள் தரம் உயர்வு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
Published on

சிவகாசி,

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகாசி தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டி கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி அந்த கிராம மக்கள் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி பள்ளபட்டி. எனவே இதை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் நான் எடுத்துரைத்தேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கூமாப்பட்டியில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும், இதே தொகுதியில் உள்ள கீழக்கோட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தக் கோரி சந்திரபிரபா எம்.எல்.ஏ. என்னிடம் கோரிக்கை விடுத்தார். விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி கூமாப்பட்டியில் மேல்நிலைப்பள்ளி மிகவும் அத்தியாவசியம் என்பதையும் நான் அறிவேன். அதுபோலவே சாத்தூர் தொகுதி ஓ.மேட்டுப்பட்டியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும், சாத்தூர் ஒன்றியம் மேலப்புதூரில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தக் கோரியும், அப்பகுதி மக்கள் அ.தி.மு.க. ஒன்றியச்செயலாளர் சண்முகக்கனி தலைமையில் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சித்தலக்குண்டு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்றக்கோரியும் அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த 6 பள்ளிகளையும் உடனடியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதன் பேரில் தற்போது இந்த 6 பள்ளிகளையும் தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை வெளியிட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், முதன்மைக்கல்வி அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட அனைத்து பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்களுக்கும் மாவட்ட மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com