விருதுநகரில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார்

விருதுநகரில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகரில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி ரூ.390 கோடி மதிப்பிலான அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

விழாவில் ரூ.444 கோடி மதிப்பிலான அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் நகராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், கிராமப்புற பகுதிகளுக்கான தாமிரபரணி குடிநீர் வினியோகம் ஆகியவற்றை தொடங்கி வைப்பதுடன் புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யவேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து விழா நடைபெற உள்ள மருத்துவ கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணிக்கு கலெக்டர் கண்ணன் தலைமையில் முகூர்த்தகால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து பணிகள் நடந்துவருகின்றன.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் விழாவுக்காக செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது அவர் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து விழாவிற்கான பிரமாண்ட விழா மேடை அமைத்தல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயனாளிகள் அமர்வதற்கான பந்தல், பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைத்தல், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு, பணியாளர்களிடம் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அமைச்சருடன் அ.தி.மு.க. பிரமுகர் கோகுலம் தங்கராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com