வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தில் 15 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி துணை முதல்-மந்திரி தகவல்

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தில் 15 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்தார்.
வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தில் 15 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி துணை முதல்-மந்திரி தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடக அரசு சார்பில் சுவாமி விவேகானந்தரின் 158-வது ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் அடிப்படையில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. கல்வித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் அவரது போதனைகளை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். கர்நாடகம் அனைத்து துறையிலும் சிறந்த விளங்குகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளை மாணவர்களிடையே பரப்ப வேண்டும்" என்றார்.

பின்னர் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்துகொண்டு, பேசும்போது கூறியதாவது:-

வேலை வாய்ப்புகள்

கல்வி நிலையங்களில் அனைத்து நிலையிலும் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் இடம் பெற வேண்டும். அதை கர்நாடக அரசு செய்துள்ளது. உயர்கல்விக்கு தேவையான அவரது கருத்துக்களும் இருக்கின்றன. தோட்டக்கலை, விவசாயம், சுற்றுலா போன்ற வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கும் துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். விவசாயம், வேளாண் சந்தை, உயர்கல்வி, தொடக்க கல்வித்துறயில் கவனிக்கத்தக்க சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறையை பொறுத்தவரையில் உயர்கல்வி படித்து முடிக்கும் மாணவர்களுக்கு உரிய தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மனித வளம் உருவாக்கப்படுகிறது. புதிய கல்வி கொள்கை அமல், கற்றல் நிர்வாக நடைமுறை, உயர்கல்வி மாணவர்கள் 1.55 லட்சம் பேருக்கு உயர்தரமான கையடக்க கணினி வழங்கும் முடிவு, ஒருங்கிணைந்த பல்கலைக்கழக, கல்லூரி நிர்வாக நடைமுறை, பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டம் மாற்றம், 4 கட்டங்களில் இளைஞர் பலத்தை பெருக்குவது, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இருக்கும் 34.6 சதவீத இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

தொழிற்பயிற்சி

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் 15 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நமது கனவுக்கு இந்த அம்சங்கள் சாதகமாக உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து வருகிற 2025-ம் ஆண்டுக்குள் 24 லட்சம் பேர் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை, என்ஜினீயரிங் ஆராய்ச்சி கொள்கை, கர்நாடக ஆராய்ச்சி ஆணையம், கர்நாடக டிஜிட்டல் பொருளாதார திட்டம் போன்றவற்றால் வரும் நாட்களில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

10 இளைஞர்களுக்கு விருது

இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 10 இளைஞர்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா விருது வழங்கி பாராட்டினார். இந்த விழாவுக்கு பிறகு கர்நாடகத்தில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com