உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் தளவாய்சுந்தரம் பேச்சு

தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற தளவாய்சுந்தரம், உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் தளவாய்சுந்தரம் பேச்சு
Published on

பூதப்பாண்டி,

தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகம் பூதப்பாண்டி ரத வீதியில் உள்ள கட்டிடத்தில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். பாக்கியலெட்சுமி, பொன்.சுந்தராஜ், ஞாலம் ஜெகதீஸ், ரமணி, ரோகிணி, பொன்னி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் லதா ராமசந்திரன் வரவேற்றார்.

தளவாய்சுந்தரம்

புதிய அலுவலகத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது, இதுபோல் 17 அலுவலகங்கள் திறந்து வைத்தேன். அந்த அலுவலகங்களை அப்போதைய நிர்வாகிகள் முறையாக செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக மக்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த அலுவலகம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் அமைய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை நிர்வாகிகள் உடனே தொடங்க வேண்டும். இதற்காக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் எப்போதும் உங்கள் தொடர்பில் இருப்பார். நிறை, குறைகளை அவரிடமே கூறலாம். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து தருவார்.

நிர்வாகிகள், தொண்டர்கள் புது உற்சாகத்துடன் செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலிலும், 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், கவிஞர் சதாசிவம், சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் திலக் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் தென்கரை மகராஜன் நன்றி கூறினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com