

விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் நேற்று அன்னவாசல் ஒன்றியம் வெள்ளையங்குடிகாலனி, பொத்தையம்பட்டி, காசியாபுரம், இடையப்பட்டி, வேளாங்காடு, கூவாட்டுப்பட்டிகாலனி, கூவாட்டுப்பட்டி, அம்பலகாரதெரு, கரம்பட்டி, கன்னியாப்பட்டி, கடம்பராயன்பட்டி, பணம்பட்டி, புளியம்பட்டி, மேட்டுப்பட்டி, கல்லம்பட்டி, காரசூரம்பட்டி, வண்ணாரப்பட்டி, புதுப்பட்டி, பரம்பூர்பள்ளிவாசல், முக்கண்ணாமலைப்பட்டி பள்ளிவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வாக்குசேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
பிரசாரத்துக்கு சென்ற பல்வேறு பகுதியில் சாலைவசதி, பஸ் வசதி மற்றும் குடிநீர்வசதி வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவிதொகை, 100 நாள்வேலைதிட்டம் 150 நாளாக உயர்த்தி 300 ரூபாய் சம்பளம், சமையல் கியாசுக்கு ரூ.100 மானியம், மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார். .ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டும் தான் பெண்களுக்கான நலதிட்டங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். பரம்பூர் மற்றும் முக்கண்ணாமலைப்பட்டியில் பள்ளிவாசல்களில் வாக்கு சேகரித்த வேட்பாளர் பழனியப்பன் பேசும்போது, எனக்கு இந்தமுறை வாய்ப்பு அளியுங்கள். உங்களுக்கு உழைக்க காத்துருக்கிறேன் என்றார்.
பிரசாரத்தின்போது, அன்னவாசல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரன், முக்கண்ணாமலைப்பட்டி முகமது இப்ராஹீம், எஒன் சாகுல்அமீது, பாபு, பாட்ஷா, பசீர், பாரூக், சாமிக்கண்ணு, யாகூப், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.