வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடி மையங்களில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்வது தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி, புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாசத்திரம், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல், திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நமணசமுத்திரம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கைக்குறிச்சி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சிறப்பு முகாம்களில் வாக்காளர்களிடம் இருந்து வரப்பெற்று உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார்.

திருத்த பணிகளுக்கு வந்த வாக்காளர்கள் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்க வந்த பொதுமக்களிடம் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6-ல் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப் படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம்.

பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், ஒரே வாக்குசாவடியில் பெயர் மற்றும் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-லும், ஒரே தொகுதியில் இடம் மாறி உள்ள வாக்காளர்கள் படிவம் 8 ஏ-விலும் உரிய ஆவணத்துடன் விண்ணப்பம் செய்யலாம். புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், தங்களது வயது உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் கணேஷ் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், தாசில்தார் பரணி மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com