வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை கலெக்டர் எச்சரிக்கை

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை கலெக்டர் எச்சரிக்கை
Published on

திருவள்ளூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? எனவும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளதா? எனவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக கடமை ஆற்றும் வகையில் அனைவரும் பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்பொருட்டு பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவது ஊர்ஜிதமானால் அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171இ-ன்படி ஓராண்டு சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

தேர்தலை முன்னிட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com