வருகிற 19-ந் தேதி ஓட்டுப்பதிவு: சட்டசபை இடைத்தேர்தல் பகிரங்க பிரசாரம் இன்று ஓய்கிறது தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்கிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வருகிற 19-ந் தேதி ஓட்டுப்பதிவு: சட்டசபை இடைத்தேர்தல் பகிரங்க பிரசாரம் இன்று ஓய்கிறது தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடந்து வரும் கூட்டணி ஆட்சியில் மந்திரியாக பணியாற்றியவர் சி.எஸ்.சிவள்ளி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்தார். அதுபோல கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவ் மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் உமேஷ் ஜாதவ் கலபுரகி தொகுதியில் களம் கண்டார்.

இதனால் சி.எஸ்.சிவள்ளி, உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்த குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகள் காலியாகின. அந்த 2 தொகுதிகளில் வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் காங்கிரஸ் சார்பில் குந்துகோல் தொகுதியில் சி.எஸ்.சிவள்ளியின் மனைவி குசுமாவதி, சிஞ்சோலியில் சுபாஷ் ராத்தோடு ஆகியோரும், பா.ஜனதாவில் குந்துகோலில் சிக்கனகவுடா, சிஞ்சோலியில் அவினாஷ் ஜாதவ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தல் களத்தில் இருமுனை போட்டி நிலவுகிறது.

தற்போது காங்கிரஸ் வசம் 2 தொகுதிகளையும் தக்க வைத்துக்கொள்ள அக்கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் சட்டசபையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 104-ல் இருந்து 106 ஆக உயரும்.

அந்த 2 தொகுதிகளையும் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்த தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்கிறது. இதையொட்டி தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com