மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வி.பி.கலைராஜன் தி.மு.க.வில் இணைந்தார்

அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வி.பி.கலைராஜன் தி.மு.க.வில் இணைந்தார்
Published on

திருச்சி,

அ.ம.மு.க. கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. கலைராஜன். இவரை அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று முன்தினம் கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் வி.பி.கலைராஜன் நேற்று திருச்சிக்கு வந்து தனியார் ஓட்டலில் தங்கி இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக வி.பி. கலைராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரனுடன் எனக்கு முரண்பாடு எதுவும் கிடையாது. தற்போது உள்ள சூழலில் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசையும், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசையும் அகற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் மட்டுமே முடியும். அதனால் தான் தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.

தமிழக உரிமைகளை மீட்பதற்காகவும், மதவாத சக்திகளை விரட்டுவதற்காகவும்தான் தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன். ஸ்டாலின் இடும் கட்டளைகளை சிட்டாக பணியாற்றி நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

வி.பி.கலைராஜன் ஏற்கனவே தி.மு.க.வில் மாணவர் அணி உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்து திறம்பட பணியாற்றியவர் தான். தற்போது மீண்டும் தி.மு.க.விற்கு வந்து உள்ளார். இதே போன்று பல கட்சிகளில் இருந்தும் தி.மு.க.விற்கு பலர் வருகை தர உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்காததால் தி.மு.க.தான் அதற்கு மாற்று என்பதை அவர்கள் உணர்ந்து உள்ளனர். தி.மு.க. நன்றாக ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com