

கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. அவ்வாறு நடக்கும் விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஏராளமானவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அவதியுற்று வருகின்றனர்.
இத்தகைய அசம்பாவிதங்களை தடுக்கவும், அடிக்கடி நடக்கும் விபத்துக்களை குறைக்கும் வகையிலும், கொட்டாம்பட்டி பகுதியில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறியப்பட்டது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஆய்வு செய்தனர். அந்த இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கொட்டாம்பட்டி போலீசார் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் அதிக அளவு விபத்து நடக்கும் பகுதிகளான கொட்டாம்பட்டி வலைச்சேரிபட்டி பிரிவு, கருங்காலக்குடி, திருச்சுனை விலக்கு, கச்சிராயன்பட்டி, கோட்டைபட்டி, பள்ளபட்டி உள்பட 12 இடங்களில் போலீசார் எச்சரிக்கை பலகைகளை வைத்தனர்.
மேலும் விபத்துக்களை குறைக்கும் வகையில் நான்கு வழிச்சாலையில் லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஓய்வுக்காக நிறுத்தும் போது, அதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும் வாகன ஓட்டுனர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.