

ஈரோடு,
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகை அன்று நாம் காலை முதல் மாலை வரை காலம் காலமாக பட்டாசு வெடித்து வருகிறோம். ஆனால் தற்போது பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் என்று நேரம் ஒதுக்கியுள்ளனர். சில இடங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்திருக்கலாம்.
அவர்களை இதுபோல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்யலாம். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா?.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுனர் விருப்பம் இல்லாமலேயே இருக்கிறார். ஏற்கனவே கோர்ட்டு விடுதலை செய்யலாம் என்று பச்சைக்கொடி காட்டி விட்டது. மேலும் தமிழக அமைச்சரவையும் தீர்மானம் போட்டு அனுப்பி உள்ளது. அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டியது ஆளுனரின் மனிதாபிமான கடமையாகும்.
அவர்கள் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்து விட்டனர். அதனால் ஆளுனர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம். ஆனால் கோர்ட்டில் மற்றொரு தரப்பினர் வழக்கு போட்டு உள்ளனர் என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.