நண்பருடன் பூங்காவில் இருந்த மாணவியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த கும்பல் - போக்சோவில் 4 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

கோவையில் நண்பருடன் பூங்காவில் இருந்த பிளஸ்-1 மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நண்பருடன் பூங்காவில் இருந்த மாணவியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த கும்பல் - போக்சோவில் 4 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் தற்போது பிளஸ்-1 மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவையை சோந்த பிளஸ்-1 மாணவி, தனது 19 வயது ஆண் நண்பருடன் கடந்த 26-ந் தேதி இரவு 8 மணியளவில் ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் திடீரென்று அந்த மாணவி மற்றும் அவருடைய நண்பரை மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், அந்த மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டார். உடனே அந்த கும்பல் மாணவியின் வாயை பொத்தியது. சத்தம்போட்டால் உன்னையும், ஆண் நண்பரையும் கொலைசெய்துவிடுவோம் மிரட்டி உள்ளனர். இதனால் அந்த மாணவி பயத்தில் உறைந்துபோனார். இதையடுத்து அந்த கும்பல், மாணவியை மறைவான பகுதிக்கு தூக்கி சென்றனர்.

பின்னர் அவர்கள் 6 பேரும் சேர்ந்து, அந்த மாணவியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அதை செல்போனில் போட்டோ எடுத்து உள்ளனர். மேலும் இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் செல்போனில் எடுத்த போட்டோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விடுவோம் என்று கூறி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதற்கிடையே மயக்கம் தெளிந்ததும் மாணவியின் நண்பா, அவரை தேடிப் பார்த்தார். அப்போது அங்குள்ள மறைவான பகுதியில் மாணவி மிகவும் சோர்வாக இருப்பது தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த நண்பர் மாணவியிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டார்.

இதையடுத்து அவர், அந்த மாணவியை அவருடைய வீட்டில் கொண்டு போய்விட்டார். அப்போது மாணவி, தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இந்த சம்பவம் குறித்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பிளஸ்-1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் பூங்கா பகுதியில் இருந்த செல்போன் டவர்களில் இருந்து சென்ற போன்கால்கள் பற்றி விவரங்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் கோவையை சோந்த டி.ராகுல் (வயது 21), ஆர்.பிரகாஷ் (22), எஸ்.கார்த்திகேயன் (28), எஸ்.நாராயணமூர்த்தி (30) என்பதும், அவர்கள் தான் பூங்காவில் இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, செல்போனில் போட்டோ எடுத்து, கொலைமிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிளஸ்- 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரையும் போலீசார் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா.

மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com