மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிலை கடத்தி வரப்பட்ட போது ஆற்றில் வீசப்பட்டதா? போலீஸ் விசாரணை

கொள்ளிடம் ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன்சிலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலையை கடத்தி வந்த ஆசாமிகள் போலீசாரை பார்த்த உடன் சிலையை ஆற்றில் வீசி சென்றார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிலை கடத்தி வரப்பட்ட போது ஆற்றில் வீசப்பட்டதா? போலீஸ் விசாரணை
Published on

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையை சேர்ந்த மீனவர்களான புஷ்பராஜ்(வயது55), குமார்(30) ஆகிய இருவரும் கொள்ளிடம் போலீஸ் சோதனை சாவடி அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் படகில் சென்று வலை வீசி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் வலையில் பெரிய மீன் சிக்கியது போன்று இருந்தது. இந்த வலையை கரைக்கு இழுத்து வந்த போது வலையில் சுமார் 1 அடி உயரமும் 4 கிலோ எடையும் கொண்ட அழகிய சிவன் சிலை சிக்கி இருந்தது. புலித்தோல் மீது சிவன் அமர்ந்திருப்பது போன்றும் பின்புறம் நந்தி, உடுக்கை, சூலம், கமண்டலம் ஆகிய அமைப்பும், தலைக்கு மேல் மரக்கிளையில் 2 மயில்கள் அமர்ந்திருப்பது போன்று கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த சிலையை மீனவர்கள் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வெளியூரில் இருந்து சிலையை கடத்தி வந்த ஆசாமிகள் சோதனை சாவடியில் போலீசாரை பார்த்த உடன் சிலையை ஆற்றில் வீசி சென்றார்களா? அல்லது புகழ்பெற்ற பழமையான கோவிலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு திருடப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சிலை கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையின் விலை மதிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com