மதகுகளை மாற்றும் பணி தொடங்குவதற்காக கிரு‌‌ஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கிரு‌‌ஷ்ணகிரி அணையின் மதகுகளை மாற்றும் பணி தொடங்குவதற்காக அணையின் நீர்மட்டத்தை 32 அடியாக குறைத்திடும் வகையில், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மதகுகளை மாற்றும் பணி தொடங்குவதற்காக கிரு‌‌ஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணை கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி அணையின் பிரதான முதல் மதகு உடைந்தது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதியன்று ரூ. 3 கோடி மதிப்பில் உடைந்த மதகிற்கு பதிலாக ஒரு புதிய மதகு பொருத்தப்பட்டது.

ஆனால் மற்ற 7 மதகுகளும் இதே போன்று சேதமாகி இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி அன்று முதல் 42 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

மாற்றும் பணி

இந்த நிலையில், 7 மதகுகளையும் மாற்றி அமைப்பதற்கான டெண்டர் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. அதன்படி ரூ. 19 கோடியே 7 லட்சம் மதிப்பில் 7 மதகுகளையும் மாற்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது புதிய மதகு தயாரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மதகையும் 6 பாகங்களாக தயார் செய்து, அணைக்கு கொண்டுவந்து 2 மதகுகளாக பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அணையின் நீர்மட்டத்தை 32 அடியாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று அணையில் இருந்து வினாடிக்கு 732 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

32 அடியாக குறைக்க முடிவு

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நாளை (வெள்ளிக்கிழமை) அணையின் பழைய 7 மதகுகளையும் வெட்டி அகற்றும் பணிகள் தொடங்க உள்ளது. தற்போது அணைக்கு சராசரியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வந்து கொண்டிக்கும் தண்ணீர் முழுவதையும் ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

நேற்று அணையின் நீர்மட்டம் 34.20 அடியாக உள்ளது. இதை 32 அடியாக குறைத்தால் மட்டுமே மதகை வெட்டி எடுக்கும் பணியினை தொடங்க முடியும். இதற்காக அணையில் இருந்து வினாடிக்கு 732 கன அடி தண்ணீர் மூன்று சிறிய மதகின் வழியாக திறக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் அணையின் நீர்மட்டத்தை 32 அடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 7 மதகுகளையும் ஒவ்வொன்றாக வெல்டிங் வைத்து வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெறும். இந்த மாத இறுதிக்குள் இப்பணிகளை முடித்து, பிப்ரவரி மாதத்தில் புதிய மதகு பொருத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. ஆகஸ்டு மாதத்திற்குள் பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் போக சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com