பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்

கிருஷ்ணா நதிநீர் வருகையால் பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் காத்திருக்கின்றன.
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகளும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்த ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் கடந்த 29-ந் தேதி 19 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது. அந்த ஏரி வறட்சியின் விளிம்பில் காட்சி அளித்தது.

இந்தநிலையில் தமிழகம்-ஆந்திரா நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 29-ந் தேதி கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 589 கன அடி வீதம் பூண்டி ஏரிக்கு வந்தது.

தற்போது பூண்டி ஏரியில் 582 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 563 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 230 கன அடி வீதம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 491 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 307 மில்லியன் கனஅடியும், 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவுடைய சோழவரம் ஏரியில் 17 மில்லியன் கனஅடியும் தண்ணீர் உள்ளன.

கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்படும் பட்சத்தில், பூண்டி ஏரியின் நீர்மட்டம் மீண்டும் சரிவில் செல்லும் நிலை ஏற்படும். இதனால் புழல் ஏரியின் நீர்மட்டமும் வெகுவாக குறையும் சூழல் ஏற்படும்.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வடகிழக்கு பருவமழை தான் கைகொடுக்கிறது.

வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை காட்டிலும் அதிகமாக பெய்யும் பட்சத்தில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படாது. பருவமழை பொய்த்துவிட்டால், கோடைகாலத்தில் குடிநீருக்காக பரிதவிக்கும் நிலை ஏற்படும்.

எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளும், நீர்பிடிப்பு பகுதிகளும் காத்திருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com