

களக்காடு,
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று களக்காடு, கீழச்சடையமான்குளம்,மஞ்சுவிளை, சிதம்பரபுரம், கல்லடி சிதம்பரபுரம்,பெரும்பத்து பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறு அ.தி.மு.க வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-ஜெயலலிதா மக்களுக்காக நான், மக்களால் நான் என்று அறிவித்து மக்களுக்காக சிந்தித்து நல்லாட்சி நடத்தினார். பெண்களுக்காக தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை,மகப்பேறு உதவித்தொகை ஆகிய திட்டங்களை அவர் செயல்படுத்தினார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. ஆட்சியை குறை சொல்வதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் 2 முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது. இவற்றின் மூலம்2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்டாலின் எத்தனையோ சவால்களை விட்டு வருகிறார். அவருக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். உங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தயாரா?. அப்படி ராஜினாமா செய்தால், அடுத்த மாதம் தேர்தல் வரும். நீங்கள் அனைவரும் தோல்வியை சந்திப்பீர்கள். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்கிறார். இப்போது உங்கள் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்பது தெரியுமா?. ஊழலை பற்றி காங்கிரசார் பேச தகுதி இருக்கிறதா?. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்த ஆட்சி தொடர அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ச.ம.க. நிர்வாகிகள் சுந்தர், ஜெபஸ்டின், ராஜபுதூர் ஏசுராஜன், பிராங்ளின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.