

புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அமைதியாக இருந்து வந்த என்.ஆர்.காங்கிரஸ் அ.தி.மு.க. மேலிடத்திடம் பேசி தொகுதியை பெற்றது. ஆனால் இதற்காக பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய பாரதீய ஜனதாவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து பாரதீய ஜனதாவும், அ.தி.மு.க.வும்தான் விருப்ப மனு பெற்றன. இந்தநிலையில் திடீரென அ.தி.மு.க. தலைமையிடம் பேசி தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் பெற்றது தான் இதற்கு காரணம்.
இந்தநிலையில் விருப்பமனு பெற்றவர்களிடம் பா.ஜ.க. அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. இதில் கல்வியாளர் வி.சி.சி.நாகராஜன், தொழிலதிபர் கணேஷ், டாக்டர்கள் தியாகராஜன், ரங்கராஜன், வக்கீல்கள் அசோக்பாபு, கமலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட ஏராளமானவர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரசார் வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சென்றுள்ளனர். நாங்கள் அவர்களிடம், எங்கள் தேசிய தலைமையுடன் பேசுங்கள் என்று கூறியுள்ளோம்.
அ.தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்வது குறித்து பா.ஜ.க.வுடன் அவர்கள் கலந்து ஆலோசிக்கவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றிபெற்ற தொகுதி அது. எனவே எங்களுக்கு அங்கே அதிகப்படியான வெற்றிவாய்ப்பு உள்ளது.
தற்போதுள்ள நிலையில் மாநில தலைமையால் எந்த முடிவும் எடுக்க முடியாது ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் காங்கிரஸ் கட்சிதான் எங்கள் எதிரி. என்.ஆர்.காங்கிரசார் கூட்டணியை ஒருங்கிணைப்பார்கள் என்று நம்புகிறோம்.
முதலில் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடவில்லை என்றார்கள். அதனால்தான் நாங்கள் போட்டியிட முயற்சி எடுத்தோம். என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை மீறக்கூடாது. சென்னையில் நடந்த பேச்சுவார்த்தைக்கும் எங்களை அழைக்கவில்லை. இதுதொடர்பாகவும், புதுவை நிலவரம் குறித்தும் கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளோம். அங்கு என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.