காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்: யாரும் குறை சொல்ல முடியாத வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் நமச்சிவாயம் பேச்சு

காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் குறை சொல்ல முடியாத வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் என்று மாநில தலைவர் நமச்சிவாயம் கூறினார்.
காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்: யாரும் குறை சொல்ல முடியாத வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் நமச்சிவாயம் பேச்சு
Published on

புதுச்சேரி,

புதுவை 100 அடி ரோட்டில் உள்ள சன்வே ஓட்டலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு முதல்அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வைத்திலிங்கம் கடந்த 22ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அன்றைய தினம் நல்ல நாள் என்பதால் அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நமது வேட்பாளர் வைத்திலிங்கத்தை யாராலும் குறையும் சொல்ல முடியாது. அவரின் சமுதாயப்பணி, வயது, கடந்த கால அரசியல் நிகழ்வு, அனுபவம் இப்படி எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத தனித்துவமான வேட்பாளரை நிறுத்தியுள்ளோம்.

கிராமம், நகரம், படித்தவர்கள், படிக்காதவர்கள், தொழிலாளிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். நமக்குள் உள்ள பகைமை உணர்வுகளை மறந்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நமது தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை நாம் நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் பேசி ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும். நாம் தேர்தல் பிரசாரத்தின் போது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். பிரசாரம் செய்ய தேர்தல் துறையிடம் தனியாக அனுமதி பெறக்கூடாது. கட்சியின் தலைமை மூலமாகவே அனுமதி பெற வேண்டும்.

கடந்த முறை கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டோம். தற்போது கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றோம். எனவே வெற்றி உறுதி. அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com