

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளிடமும் கலெக்டர் கந்தசாமி கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், இதனை சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நார்த்தாம்பூண்டி கிராமம் அண்ணா நகர் மற்றும் இருளர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்த கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 38 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். இந்த பகுதியில் பல்வேறு சமுதாயத்தினர் உள்ளனர். எங்களுக்கு ஊராட்சியின் மூலம் சாலை வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் தொடர் மழை காலங்களில் நீர்பிடிப்பு இருந்தது இல்லை. எங்களுக்கு மழையால் எப்போதும் சேதம் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் எங்களுக்கு பொது பணித்துறையில் நீர் ஆதாரப்பிரிவு பொறியாளர் மூலம் எங்கள் குடியிருப்புகளை அகற்ற அறிவிப்பு தபால் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே, மாவட்ட கலெக்டர் நாங்கள் குடியிருக்கும் பகுதியை நேரில் ஆய்வு செய்து, அந்த பகுதியில் எங்களை நிரந்தரமாக வசிக்கவும், பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போளூர் தாலுகா மாம்பட்டு தேவாங்கர் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சங்கத்தில் சுமார் 140 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் 2013-ம் ஆண்டு கைத்தறி நெசவாளர் கடன் அட்டை வாங்கி, அதன் மூலம் எங்கள் ஊரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதற்கட்டமாக ரூ.25 ஆயிரம் கடன் பெற்றோம். அதை கட்டி முடித்த பிறகு 2-வது கட்டமாக ரூ.50 ஆயிரம் கடன் பெற்றோம். ஆனால் இந்த 2 கடன்களுக்கும் இதுவரை மானியம் எதுவும் வழங்கப்படவில்லை.
எனவே, நாங்கள் வாங்கி கட்டிய கடன்களுக்கு மானியத் தொகை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் நாங்கள் வாங்கிய கடனுக்கு வங்கியில் அதிகபட்ச வட்டியை எங்களிடம் வசூலித்து உள்ளார்கள். முத்ரா திட்டத்தின்கீழ் ஒருவருக்கு ரூ.2 லட்சம் வரை மானியக் கடன் வழங்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, மானியத்துடன் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்து மக்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அணை செல்லும் சாலையில், காந்திநகரில் இந்து மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் குடியிருப்பு அருகில் முருகன் கோவில் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பக்கத்தில் கிறிஸ்தவ ஜபக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, ஜபக் கூடத்தினை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் மற்றும் கண்பார்வையற்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஒலிரும் மடக்கும் குச்சி 10 பேருக்கு நலத்திட்ட உதவியாக கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.