தேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம் - மு.க.அழகிரி

தேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம் என்று மு.க.அழகிரி தெரிவித்தார்.
தேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம் - மு.க.அழகிரி
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட மு.க.அழகிரி பேரவை சார்பில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. இதில், மு.க.அழகிரி கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

நான் கட்சியில் இருக்கிறேனா? இல்லையா? என்றே தெரியாமல் வழிநெடுகிலும் தி.மு.க. கொடியை கட்டி உள்ளனர். இது, நான் கட்சியில் இருக்கிறேன் என்ற உணர்வை காட்டுகிறது. தொண்டர்களுக் காக வாதாட சென்றபோது, சிலர் செய்த சதியால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேனே தவிர, கருணாநிதியின் அன்பில் இருந்து நான் ஒரு போதும் வெளியேற்றப்படவில்லை.

14 வயதில் இருந்தே பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தவர் கருணாநிதி. பொதுவாழ்வில், ஏராளமான சிறை தண்டனைகளை அனுபவித்துள்ளார். பாளையங்கோட்டையில், தனிமை சிறையில் அடைக்கப்பட்டதை பார்த்தபோது நெஞ்சம் பதபதைத்தது. ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார்.

கருணாநிதியின் ஆற்றல், அறிவு சிறிதளவு கூட என்னிடம் இல்லை. அவரிடம் இருந்து சுயமரியாதை, உழைப்பை கற்றுக் கொண்டேன். திருமங்கலம் உள்பட பல்வேறு இடைத்தேர்தல்களில் தொண்டர்களின் ஆதரவோடு கடுமையான உழைப்பால் தி.மு.க.வுக்கு வெற்றியை தேடி தந்தேன். தற்போது, தி.மு.க. பிள்ளை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பதவி தருவதாக கூறி கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் ஆகியோரை தி.மு.க. பக்கம் இழுத்துள்ளனர்.

தேர்தல் வரும் வரை பொறுமையாக இருப்போம். அதன்பிறகு நமது உழைப்பையும், திறமையையும் காட்டுவோம் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மு.க. அழகிரி பேரவை, கொங்கு வேளாள கவுண்டர் பேரவை, 24 மனை தெலுங்கு செட்டியார் சங்க நிர்வாகிகள் உள்பட பல்வேறு பல்வேறு அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com