குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலில் வெற்றிபெறுவோம் - டி.டி.வி.தினகரன்

குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலில் வெற்றிபெறுவோம் - டி.டி.வி.தினகரன்
Published on

மூலனூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டார். நேற்று 3-வது நாளாக உடுமலையிலிருந்து காரத்தொழுவு நால்ரோட்டில் கொடியேற்றி வைத்து அவர் பேசியதாவது:-

தற்போதைய தமிழக அரசு மத்திய அரசுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு வேலை செய்கிறது. மக்களுக்கான எந்த விதமான நலத்திட்ட உதவிகளையும் பெற்றுத்தரவில்லை. மேலும் தற்போது பெரும்பான்மையான பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து தள்ளாடுகிறது. இனிவரும் காலங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை அறிவிக்க இருக்கிறது. மேலும் இந்த அரசு எந்த சூழ்நிலையிலும் கவிழும் சூழ்நிலையில் இருப்பதால் மத்திய அரசுடன் அவர்கள் சொல்லும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தில் பினாமி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. எனவே கூடிய விரைவில் அனைத்து தரப்பு மக்களிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நம்பிக்கையை பெற்று அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து தாராபுரத்தை அடுத்த கரையூர், மூலனூர், தாசவநாயக்கன்பட்டி, வெள்ளகோவில், காங்கேயம், நத்தகாடையூர் ஆகிய பகுதிகளில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றோம். அதேபோல திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க.கட்சி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறுவோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வருகின்ற தேர்தல்களில் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் இருந்த கூட்டுறவு நூற்பாலை மூடிக்கிடக்கிறது. அந்த இடத்தில் தாராபுரம் பகுதி மாணவ-மாணவிகள் படிக்கும் வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் நகரமயமாக்கும் திட்டத்தில் அமராவதி அணையின் உபரி நீரை நல்லதங்காள் அணைக்கு கொண்டு வந்து இப்பகுதி விவசாயம் செழிப்பதற்கு பாசன வசதி செய்து கொடுக்கப்படும். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் துணையோடு அனைத்து பணிகளும் நிறைவேற்றித்தரப்படும்.

மூலனூர் அருகே சின்னமருதூரில் 500 டன் வெடி மருந்து குடோன் செயல்பட்டு வருகிறது. இதுமுறையாக அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், இதை தடை செய்ய வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்வலி கிழங்கு விதைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுபோல் மூலனூர் அருகே பெரியார் நகரில் தொகுப்பு வீடுகளில் இட நெருக்கடியில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டுவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எரசனம்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் மும்முனை மின்சாரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இவை அனைத்தும் நிறைவேற்றித்தரப்படும்.

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு அமராவதி ஆற்றின் உபரிநீரை கொண்டுவர வேண்டும். வெள்ளகோவிலில் அரசு தொழில்நுட்பக்கல்லூரி அமைக்க வேண்டும். வெள்ளகோவிலை தலைமையிடமாக கொண்டு தாலுகா உருவாக்க வேண்டும். வெள்ளகோவில் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளர்கள். இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். அப்போது இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இதுவரை 1 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதை 2 கோடி பேராக இலக்கு நிர்ணயித்து அதிகமாக உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தாசவநாயக்கன்பட்டியில் முளைப்பாரி ஏந்தி பெண்கள் வரவேற்பு கொடுத்தனர். மேலும் மூலனூரில் பூரணகும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேலு, மாநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர் வேலுமணி, பேரூர் கழக செயலாளர் குப்புசாமி, இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், காங்கேயம் ஒன்றிய செயலாளர் பி.எஸ்.ஆர். என்ற பி.சுப்பிரமணியம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சண்முகராஜ், வெள்ளகோவில் நகர செயலாளர் கணேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com