துரோகம் செய்தவர்களுடன் இணைய மாட்டோம் - மதுரையில் டி.டி.வி.தினகரன் பேட்டி

“துரோகம் செய்தவர்களுடன் ஒருபோதும் இணைய மாட்டோம்” என்று மதுரையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
துரோகம் செய்தவர்களுடன் இணைய மாட்டோம் - மதுரையில் டி.டி.வி.தினகரன் பேட்டி
Published on

மதுரை,

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க.வை ஆதரிப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே?

பதில்: அவர் உளறுகிறார். யாரோ கூறுவதற்காக என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். வேடிக்கையாக பேசுவதை கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. விரைவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருப்பவர் பேச முடியாத காரணத்தால் வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

கேள்வி: ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் கூறிய கருத்துகள் குறித்து தங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: மற்றவர்களை புண்படுத்தும் வகையில் சீமான் தேவையில்லாத கருத்துகளை பேச கூடாது. ஒரு பிரதமராக இருந்தவரின் படுகொலை பற்றி பேசுவது சரியல்ல. தேவையில்லாத பிரச்சினையை பேச வேண்டிய அவசியம் இல்லை. சீமான் பேசியதை திரும்ப பெற்றுக்கொண்டால் அவருக்கும் நல்லது. என்னை போன்ற அரசியல்வாதிக்கும் நல்லது.

கேள்வி: இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்?

பதில்: எங்கள் கட்சிக்கு சின்னம் பெறுவதற்கான விசாரணை டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக வழக்கம் போல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை முறியடித்து எங்கள் கட்சிக்கென்று தனி சின்னத்தை பெற்று தேர்தலில் போட்டியிடுவோம். ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிட முடியாது. பல சின்னங்களில் போட்டியிட்டால் மக்கள் மனதில் குழப்பம் ஏற்படும். எனவே ஒரே சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம்.

கேள்வி: இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்து இருக்கிறாரே?

பதில்: இந்த கருத்தை நானும் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com