நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜனதாவை வெற்றி பெற செய்வோம் - அர்ஜுன் சம்பத் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜனதாவை 20 தொகுதிகளில் வெற்றி பெற செய்வோம் என அர்ஜுன் சம்பத் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜனதாவை வெற்றி பெற செய்வோம் - அர்ஜுன் சம்பத் பேட்டி
Published on

கும்பகோணம்,

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத், கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என ரஜினி கூறி உள்ளார். வேல்முருகன், சீமான், திருமுருகன் காந்தி போன்றவர்கள் செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்கள், வீரப்பனின் கூட்டாளிகள், கொலை குற்றவாளிகள், வங்கி கொள்ளையில் ஈடுபடுபவர்களை தமிழர்கள் என பேசி கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

வ.உ.சி., காமராஜர், முத்துராமலிங்க தேவர், பாரதியார் போன்றவர்களைத்தான், தமிழர்களுடன் ஒப்பிட வேண்டும்.

தமிழர்கள் என பேசி தமிழ் தேசிய அரசியல் செய்பவர்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டவர்கள் அவர்கள். இத்தகைய அமைப்புகள், நிர்வாகிகள் பேச்சை நம்பி அவர்களது பின்னால் தமிழக மக்கள் செல்லக்கூடாது.

உண்மையில் தமிழகம், தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே தலைவர் பிரதமர் மோடி ஆவார். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜனதா கட்சியை வெற்றி பெற செய்வோம்.

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் பொதுத்தேர்தல் நடக்கும்போது தனித்து போட்டியிடுவோம் என்றும், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்போம் என்றும் ரஜினிகாந்த் கூறி உள்ளார். தேர்தலின்போது ரஜினிகாந்தை ஆதரிப்போம். அவருடைய தலைமையில் ஆன்மிக அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்து மக்கள் கட்சி சார்பில் 20 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.

ஈழத்தமிழர்களுக்கு இடையேயான போரில் காங்கிரஸ், தி.மு.க. ஆதரவு இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என டெல்லியில் ராஜபக்சே கூறி உள்ளார். அப்படிப்பட்ட காங்கிரஸ், தி.மு.க.வுடன் தான் வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் கூட்டணி சேர்ந்து உள்ளனர். ராஜீவ் காந்தியை கொலை செய்யாமல் இருந்திருந்தால் இலங்கையில் தனி ஈழம் கிடைத்திருக்கும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற்றம் செய்து வருகிறார்கள். எனவே அங்கு சிவசேனா, இந்து மக்கள் கட்சி சார்பில் தேவையான பிரசாரங்களை செய்து வருகிறோம். இந்திய மற்றும் தாய் தமிழகத்தின் ஆதரவை தெரிவித்து மத மாற்றத்தை தடுப்போம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் சீனாவின் கை ஓங்கி உள்ளது. இலங்கையில் சீனாவின் கை ஓங்கியதால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட போகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com