நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மின்கம்பத்தில் ஏறி அமர்ந்த வாலிபரால் பரபரப்பு

நாகர்கோவில் ரெயில் நிலைய மின்கம்பத்தில் ஏறி அமர்ந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மின்கம்பத்தில் ஏறி அமர்ந்த வாலிபரால் பரபரப்பு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டாரில் சந்திப்பு ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3-வது நடைமேடை பகுதிகளில் இருந்து புறப்படக்கூடிய ரெயில்களுக்காக தண்டவாளத்தின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இதற்கான மின்கம்பங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

ரெயில் என்ஜின்களுக்கு மின் வினியோகம் செய்யும் மின்கம்பிகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு வசதியாக மின்கம்பங்களுக்கு இடையே இரும்பு கம்பிகளால் ஆன பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கு கீழே தான் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் 2-வது நடைமேடையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி, இரும்பு கம்பிபாலம் வழியாக சென்று மற்றொரு மின்கம்பத்தில் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த பாதையில் மின்வினியோகத்தை தடை செய்யுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே ரெயில்வே போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) பெனட்தம்பி மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த வாலிபரை மீட்கும் பணியில் இறங்கினர். அந்த வாலிபர் கீழே விழுந்தால் உடலில் காயம் படாமல் காப்பாற்றுவதற்காக தீயணைப்பு வீரர்கள் மின்கம்பத்துக்கு கீழே வலையை விரித்து பிடித்தபடி தயார் நிலையில் இருந்தனர். 2 பேர் மின்கம்பத்துக்கு மேலே ஏணி மூலம் சென்று, அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு தரையிறக்கும் பணியில் ஈடுபட்டனர். அதுவரை அந்த வாலிபர் அவர் அமர்ந்திருந்த இடத்திலேயே அசையாமல் அமர்ந்திருந்தார். மின்கம்பத்தின் மேலே சென்ற 2 தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரின் கை, கால்களை கட்டினர். பின்னர் ஒரு வீரர் அவரை தோளில் சுமந்தபடி கீழே இறங்கி வந்தார். மற்றொருவர் அந்த வாலிபரின் உடலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை மேலே இருந்து பிடித்து கொண்டிருந்தார்.

சுமார் 1 மணி நேரம் போராடிய தீயணைப்பு படையினர் காலை 8.30 மணி அளவில் அந்த வாலிபரை கீழே கொண்டு வந்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரனிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த வாலிபரை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது பெயர் பிரமோத் அப்பார்டு (வயது 32) என்றும், தந்தை பெயர் கிரிப்போ தொப்பேடு என்றும் கூறினார். பின்னர் தனது பெயர் சோப்டி என்றும், ஜார்க்கண்ட் மாநிலம் என்றும் தெரிவித்தார். பிறகு ஒடிசா எனவும் கூறினார். இப்படி அவர் மாறி, மாறி முன்னுக்குப்பின் முரணாக கூறிக் கொண்டே இருந்தார். இதனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

போலீசாருக்கு அவர் பேசும் மொழி சரியாக தெரியாததால் இந்தி பேசும் ரெயில்வே தொழிலாளர்களை கொண்டு அந்த வாலிபரிடம் பேச வைத்தனர். அப்போது அந்த வாலிபர் இந்தி மற்றும் ஒடிசா மாநில மொழியையும் கலந்து பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கும் அந்த வாலிபர் பேசுவது சரியாக புரியவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபருக்கு காலை உணவு வாங்கி கொடுத்தனர். சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த வாலிபர் திடீரென எழுந்து அங்கிருந்து ஓடிவிட்டார் என போலீசார் தெரிவித்தனர். அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்த வில்லை என்று தெரிகிறது.

வாலிபரை மீட்கும் பணியை பயணிகள் ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை பாசஞ்சர் ரெயில் நேற்று 1 மணி நேரம் தாமதமாக 8.10 மணிக்கு புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com