500 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வழங்கினார்

பெரம்பலூரில் நடந்த நிகழ்ச்சியில் 500 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கத்தை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வழங்கினார்.
500 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வழங்கினார்
Published on

பெரம்பலூர்,

சமூக நலத்துறையின் சார்பில் படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), எம்.பி. மருதராஜா (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தா பெரம்பலூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த 221 பயனாளிகளுக்கு திருமண நிதிஉதவியான தலா ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும், தாலிக்கு 8 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த 279 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் பயனாளிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக கலெக்டர் சாந்தா பேசுகையில், திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வாழும் ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த இளம் பெண்கள் கல்வி கற்கும் சூழல் உருவாகி வருகின்றது. மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தை பிறப்பை ஊக்குவித்து, சமூகத்தில் பாலின விகிதாச்சாரம் சமநிலை அடையும். எனவே பெண்கள் அனைவரும் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு பெண் குழந்தைகள் காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற காலண்டர் வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி (பொறுப்பு) பூங்கொடி வரவேற்றார். முடிவில் வேப்பந்தட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com