மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் சாலை மறியல்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் பங்கேற்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் சாலை மறியல்
Published on

பெரம்பூர்,

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து நேற்று காலை சென்னை தண்டையார்பேட்டை சிக்னல் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மருதுகணேஷ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது தண்டையார்பேட்டை சிக்னல் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த பாரி-தமிழரசிக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் புதுமண தம்பதிக்கு அந்த பகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவது பற்றி தகவல் கிடைத்தது.

இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடமுடிவு செய்த புதுமண தம்பதிகள், மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் அவர்களும் தி.மு.க. கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுமண தம்பதியினர் பாரி-தமிழரசி ஆகியோர் தாங்கள் கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளை அங்கிருந்தவர்களிடம் கொடுத்தனர்.

பின்னர் அவர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். சிறிது நேரத்துக்கு பின்னர் புதுமண தம்பதியினர் போராட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று விட்டனர்.

இதுபற்றி புதுமாப்பிள்ளை பாரி கூறும்போது, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது வருந்தத்தக்கது. இதை கண்டித்து அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் நாங்களும் பங்குபெற்றது மன நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

புதுமண தம்பதியினர் சென்ற சிறிது நேரத்தில் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட எர்ணாவூர் நாராயணன், மருதுகணேஷ் உள்ளிட்ட 250 பேரை கைது செய்து, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com