தஞ்சை அருகே வெற்றிலை பாக்கு, பூ கொடுத்து வாக்காளர்களுக்கு வரவேற்பு

தஞ்சை அருகே சூரியம்பட்டியில் வாக்காளர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ கொடுத்து வரவேற்புஅளிக்கப்பட்டது.
தஞ்சை அருகே வெற்றிலை பாக்கு, பூ கொடுத்து வாக்காளர்களுக்கு வரவேற்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை ஒன்றியத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 349 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச்சாவடி அருகே வேட்பாளர்கள் சார்பில் மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நின்று கொண்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

தஞ்சையை அடுத்த மறியல் பகுதியில் ஒரு வேட்பாளர் தனது சின்னமான கத்திரிக்காயை ஒரு சாக்குப்பையில் வைத்திருந்தார். தஞ்சையை அடுத்த சூரியம்பட்டி கிராமத்திலும் வாக்குச்சாவடிக்கு செல்லும் சாலையில் வேட்பாளர்கள் மையங்களை அமைத்து இருந்தனர்.

வெற்றிலைபாக்கு, பூ

இந்த மையத்தில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்தும், நெற்றியில் திலகமிட்டும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள், சுற்றத்தாரை வாசலில் நின்று வரவேற்பது போல வாக்காளர்களை வரவேற்றனர். மேலும் வாக்காளர்களுக்கு சுண்டல், தேநீர் வழங்கி உபசரிப்பு செய்தனர். பின்னர் மாதிரி வாக்குச் சீட்டு வழங்கி தங்களது சின்னத்தைக் கூறி வாக்கு சேகரித்து வழியனுப்பி வைத்தனர்.

மேலும், முக்கிய அரசியல் கட்சிகள், வசதி படைத்த வேட்பாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ, சரக்கு ஏற்றும் வேன்கள் உள்ளிட்டவற்றில் வாக்காளர்களை ஏற்றிக் கொண்டு வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அவரவர் பகுதிகளில் கொண்டு விடப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com