

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாள் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. மேலும் முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து 3 பேருக்கு திருமண உதவித்தொகை, 10 பேருக்கு கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் பேசுகையில், நாட்டுக்காக பாடுபட்ட முன்னாள் படைவீரர்களின் சேவையை பாராட்டும் வகையில் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 19 லட்சத்து 48 ஆயிரத்து 357 கொடிநாள் நிதியாக வசூலானது. அதேநேரம் முன்னாள் படைவீரர் சேமநலநிதி மூலம் 369 பேருக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரமும், தொகுப்புநிதி மூலம் 155 பேருக்கு ரூ.41 லட்சமும் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டு உள்ளது. நாட்டுக்காக பாடுபட்ட முன்னாள் படைவீரர்களுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் கொடிநாள் நன்கொடை வழங்க வேண்டும், என்றார்.
இதில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சுகுணா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.