

அண்ணன்-தம்பி
தர்மபுரி மாவட்டம் அரூர் போளயம்பாளையம் பகுதியைச் சர்ந்தவர் சிவகுமார் (வயது 42). அவருடைய மனைவி அம்பிகா (35). இவர்கள் 2 பேரும் சொந்தமாக வீட்டில் தையல் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதிக்கு சென்று வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மனோஜ் குமார் (13), மதன்குமார் (6) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் மனோஜ் குமார் திருப்பூரில் உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும், மதன்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
விபத்து
சிவகுமாரின் பெற்றோர் அரூரில் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் பேரன்களை பார்க்க வேண்டும் என விரும்பினர். இதைத்தொடர்ந்து சிவகுமார் தனது மகன்கள் மனோஜ்குமார், மதன்குமார் ஆகியோரை மோட்டார்சைக்கிளில் வைத்துக்கொண்டு நேற்று திருப்பூரில் இருந்து தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தார். மதியம் 1 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி குருப்பநாயக்கன்பாளையம் அருகே சென்றபோது சிவகுமார் சாலையோரத்தில் உள்ள மண் தரையில் மோட்டார்சைக்கிளை இறங்கி, பின்னால் வந்த வாகனங்களுக்கு வழி விட்டார். அதன்பின்னர் அவர் மீண்டும் சாலையில் மோட்டார்சைக்கிளை ஏற்ற முயன்றார். இதில் நிலைதடுமாறி 3 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். அப்போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி அந்த வழியாக எதிரே வந்து கொண்டிருந்த வாகனம் ஒன்று 3 பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.
2 பேர் சாவு
இதில் மனோஜ் குமார், மதன்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிவக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மனோஜ்குமார், மதன்குமார் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து மதன்குமார் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மதன்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிவகுமார் பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்ற வாகன டிரைவரை தேடி வருகிறார்கள். இறந்த 2 சிறுவர்களின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.