

நகை-பணம் கொள்ளை
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நாகூர் கனி. இவர், நேற்று காலை இளம்பெண் மற்றும் சிறுமியுடன் காரில் வந்து இறங்கினார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென நாகூர் கனி உள்பட 3 பேர் மீதும் மிளகு ஸ்பிரே அடித்து, சரமாரியாக தாக்கி விட்டு, அவர்களிடம் இருந்த அரை கிலோ தங்கம், ரூ.1 லட்சம் மற்றும் 3 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
அதிகாலையில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகிறார். அவர் நாகூர்கனி, அந்த பெண் மற்றும் சிறுமி ஆகியோரை கணவன்-மனைவி மற்றும் அவர்களுடைய குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் குருவியாக சார்ஜாவுக்கு தங்கம் கடத்தி வர அனுப்பி வைத்தார்.
அதன்படி நாகூர்கனி உள்பட 3 பேரும் சார்ஜாவில் இருந்து அரை கிலோ தங்கம், விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவைகளை சென்னைக்கு கடத்தி வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் சாலிகிராமத்துக்கு வந்து இறங்கினர்.
அப்போது விமான நிலையத்தில் இருந்து இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், 3 பேர் மீதும் மிளகு ஸ்பிரே அடித்து தாக்கிவிட்டு தங்கம், பணம், செல்போன்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.