

மதுரை,
மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களும், அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் தனித்தனி அறைகளில் சேர்க்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவுகள் தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறியதாவது:-
மதுரை கொரோனா மருத்துவமனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள், அறிகுறிகளுடன் இருப்பவர்கள் என 50-க்கும் குறைவான நபர்கள் தனித்தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் வழங்கவேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
அதற்கு ஏற்ப உணவுகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தயார் செய்யப்படுகிறது. அதற்கு தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் எந்தெந்த நோயாளிகளுக்கு எந்த வகையான உணவுகளை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றனர். குறிப்பாக காலையில் இஞ்சி, தோல் நீக்கப்படாத எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் நன்கு கொதிக்கவைத்து வழங்குகிறோம். சப்பாத்தி, இட்லி, சம்பா கோதுமை உப்புமா வழங்குகிறோம். இதுபோல் காலை மற்றும் இரவு வேளைகளில் அவித்த முட்டை மற்றும் பால் வழங்குகிறோம். மதியம் சாம்பார் சாதம், புதினா சாதம், கீரை வகை, பொட்டுக்கடலை, பயறு ஆகியவை கொடுக்கிறோம்.
சத்தான உணவு தயார் செய்ய சமையல் கலைஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பொழுதுபோக்கிற்காக அனைத்து அறைகளிலும் ஏற்கனவே தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது.
நோயாளிகள் மற்றும் அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் மனோதத்துவ நிபுணர்களும் இருக்கின்றனர். அவர்கள் நோய் பாதிப்பில் இருந்து எவ்வாறு விடுபடலாம், எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.
நோயாளிகளை கவனிக்க டாக்டர்களும், தனித்தனி செவிலியர்களும், சுகாதார பணியாளர்கள் என ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு டாக்டர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இவர்களைப் போலவே மதுரை ஆஸ்டின்பட்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் தரமான, சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களும் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த 5 பேர் சின்ன உடைப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டு 14 நாட்கள் கடந்ததை தொடர்ந்து தற்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.