நிம்மதியை தொலைத்து எதை தேடுகிறோம்?

இன்றைய எந்திர யுகத்தில் ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய பணிகளுக்காக பம்பரத்தை விட வேகமாக சுழல்கின்றனர்.
நிம்மதியை தொலைத்து எதை தேடுகிறோம்?
Published on

அடிமட்ட ஊழியர் முதல் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி வரை தாங்கள் வேலை பார்க்கும் இடங்களில் பணிச்சுமையினை அனுபவித்தே தீரவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

இங்கே, விடுமுறையின்றி வேலை செய்தாலும் போதிய ஊதியம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் ஒரு சாராரிடமும், லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும் குடும்பத்துடன் சந்தோஷமாக பொழுதை கழிக்க விடுமுறை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இன்னொரு சாராரிடமும் இருக்கிறது.

இதற்கிடையே, பணிபுரியும் இந்தியர்கள் பலரும் பணிச்சுமை காரணமாக விடுமுறையை தியாகம் செய்வதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் ஒன்றை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி முதல் வாரம் வரை ஆயிரக்கணக்கான இந்தியர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.

நமது தேசத்தில் ஒரு பணியாளருக்கு சராசரியாக ஆண்டுக்கு 17 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனாலும், 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிச்சுமை காரணமாக விருப்பப்படி விடுமுறை எடுக்க முடிவதில்லை என்று தெரிவித்து உள்ளனர். 25 சதவீதத்துக்கும் அதிகமானோர், கடமையே கண் கண்ட தெய்வம் என குடும்பத்தைவிட பார்க்கும் வேலையின் மீது அதீத அன்பு வைத்திருப்பதால் விடுப்பு எடுக்க ஆர்வம் காட்டுவதில்லையாம். இன்னொரு 30 சதவீதம் பேரோ, பூனையை கண்டு பதுங்கும் எலியைப் போல், தங்களது உயர் அதிகாரிகளின் அருகே நெருங்கவே பயந்து விடுமுறை எடுக்கும் முடிவை மூட்டை கட்டி வைத்து விடுகின்றனர். எஞ்சியோர் விடுப்பு எடுப்பதை அவமரியாதையாக கருதுவதால், விடுமுறை என்ற எண்ணமே அவர்களின் சிந்தையில் உதிப்பதில்லை என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. இதையெல்லாம் கடந்து, ஒருவழியாக போராடி விடுமுறை வாங்கினாலும் அலுவலக நெருக்கடிகளால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்பதே 60 சதவீத பேரின் பதிலாக இருக்கிறது.

எதிலும் போட்டி நிறைந்த இன்றைய சமூகத்தில், மகிழ்ச்சி, நிம்மதியை தொலைத்து நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறான்.

-ஒர்ஜித் ஆண்டனி

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com