சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம்

மக்கள் அதிக அளவு தண்ணீரை பயன்படுத்துவதால் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம்
Published on

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே பாச்சல் குருமன்ஸ் காலனியில் வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், வானிலை ஆய்வாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வட கிழக்கு பருவமழை காலம் தமிழகத்திற்கு முக்கியமான காலமாகும். கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை இயல்பை விட 55 சதவீதம் குறைவாக பெய்தது. தென்மேற்கு பருவ மழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு மழை படிப்படியாக நகர்ந்து வடக்கே செல்லும். ஆனால் சமீபத்தில் வாயு புயல் உருவாகி குஜராத்திற்கு கடந்து சென்றதால், தென்மேற்கு பருவமழை வடக்கே செல்வதில் தடையாகிவிட்டது.

பொதுவாக ஜூன் மாதத்தில் 5 சென்டிமீட்டர், ஜூலையில் 7 சென்டிமீட்டர், ஆகஸ்டில் 9 சென்டிமீட்டர், செப்டம்பரில் 11 சென்டிமீட்டர் மழை பெய்யும். மொத்தமாக பார்த்தால் 44 சதவீதம் மழை பெய்யும். பொதுவாக தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழகத்தில் புயல் உருவாகாது. ஆனால் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே புயல் உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கும்.

ஆனால் அதை முன்கூட்டி சொல்ல இயலாது. அந்தந்த பருவ கால மாற்றத்தை பொறுத்து தான் கணித்து கூற முடியும். சென்னையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தென் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாக மழையின் அளவு ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். அதேபோன்று மழையின் அளவு, மக்களின் தண்ணீர் பயன்பாடு காரணமாகவே அந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். அதன் அடிப்படையில் தான் கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் 44 சதவீதம் வரை மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்துவதால் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மழை காலங்களில் தமிழகத்தில் மழைநீரை சேமித்து வைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முன்வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் மழைநீர் சேமிக்கும் எண்ணம் இருந்தால் நிலத்தடி நீர்மீட்டம் தானாகவே உயரும். ஊர்கூடி தேர் இழுப்பது போல், அனைவரும் மழைநீரை சேமித்தால் இனி வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி செழிப்பாக நாமும் வாழ்வோம், நாடும் வளரும். சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்படும் போது, மழை பெய்வதிலும் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com