ஆட்சியாளர்களே வரவேற்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

கோவையில் கவர்னர் ஆய்வுக்கூட்டம் நடத்தியதை ஆட்சியாளர்களே வரவேற்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நேரில் ஆறுதல் சென்னை ஆதம்பாக்கத்தில் காதல் பிரச்சினை காரணமாக பெண் என்ஜினீயர் இந்துஜா என்பவரை ஆ
ஆட்சியாளர்களே வரவேற்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
Published on

பூந்தமல்லி,

கோவையில் கவர்னர் ஆய்வுக்கூட்டம் நடத்தியதை ஆட்சியாளர்களே வரவேற்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் காதல் பிரச்சினை காரணமாக பெண் என்ஜினீயர் இந்துஜா என்பவரை ஆகாஷ் என்ற வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றார். இதில் இந்துஜாவின் தாயார் மற்றும் தங்கைக்கு தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவரையும் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக கவர்னர் மக்கள் மீது அக்கறை கொண்டு அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார். இது ஏதோ ஒரு தவறான முன்உதாரணம் போல் முன்நிறுத்துகிறார்கள். ஒரு வளாகத்திற்குள் தான் கவர்னர் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். தமிழக மக்கள் மீது அக்கறையோடு இங்கே நிர்வாகம் எப்படி நடக்கிறது? என்பதை ஆய்வு செய்தேன் என்று கவர்னர் கூறியுள்ளார்.

அவர் எந்தவிதத்திலும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவில்லை. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. எதிர்க்கட்சியினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்? என்று தெரியவில்லை.

கவர்னர் ஆய்வு கூட்டம் நடத்துவதால் என்ன தவறு நடந்து விட்டது?. அதிகாரிகள் இன்னும் சரியாக செயல்பட வேண்டும் என்ற ஊக்கம் வந்துள்ளது. நல்லது நடந்தால் ஏன் இந்த அளவிற்கு பதறுகிறீர்கள்?. கவர்னர் இத்தகைய கூட்டங்கள் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்ட அரசாங்கத்தில் அவர் அங்கம் வகிக்கும் மாநிலத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மாநிலத்தை சார்ந்தவர்களிடம் கூட்டம் நடத்த முடியும் என்றால் கூட்டம் நடத்தலாம். இது எந்தவிதத்திலும் அதிகார மீறல் கிடையாது. அது அக்கறையின் வெளிப்பாடு என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழக அமைச்சர்கள், இது எங்களுக்கு உதவிகரமாக இருக்கும், மத்திய அரசிடம் இருந்து சில உதவிகளை பெறுவதற்கு ஊக்கமாக இருக்கும் என்று கூறி உள்ளனர். ஆட்சியாளர்களே வரவேற்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை? என்று தெரியவில்லை, தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர்.

சரியாக செயல்பட வைப்பதற்காக ஒரு ஆதரவு கரத்தை கவர்னர் நீட்டுகிறார். அதற்கு எதிர்க்கட்சிகள் ஏன்? எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் கூட்டம் நடக்கும் என்று கவர்னர் கூறி இருக்கிறார். ஆட்சியாளர்கள் தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக கூறி உள்ளனர். தமிழகத்தில் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற முயற்சியை கவர்னர் மேற்கொண்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com