

திருவாரூர்,
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்களுக்கான டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் சிகிச்சை குறித்த கருத்தரங்கு திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்தது. கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
டெங்கு தடுப்பு பணிகளில் கள ஆய்வு மேற்கொள்பவர்களால் டெங்கு கொசு எவ்வாறு உற்பத்தியாகிறது என்பதை அறிய முடியும். அவ்வாறு அறியும்போது பொதுமக்களுக்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் முறை குறித்து களப்பணியாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
திருவாரூரில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு டாக்டர்கள் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவை 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உடனடியாக டெங்கு பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு டாக்டர்கள், முன் எச்சரிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்வது அவசியம் ஆகும். டாக்டர்கள், செவிலியர்கள் டெங்கு தடுப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் டெங்கு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் ரகுநந்தன், மாநில கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் துரைராஜ் ஆகியோர் நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஜயகுமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் உமாசந்திரசேகர், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் ஸ்டான்லி மைக்கேல், ரவீந்திரன், சண்முகசுந்தரம், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பழனிசாமி, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் தேவிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.