மு.க.ஸ்டாலின் காரில் வந்தபோது தி.மு.க. பேனர்களை அகற்றிய டிராபிக் ராமசாமியால் பரபரப்பு

மு.க.ஸ்டாலின் காரில் வந்தபோது தஞ்சையில், தி.மு.க. பேனர்களை டிராபிக் ராமசாமி அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலின் காரில் வந்தபோது தி.மு.க. பேனர்களை அகற்றிய டிராபிக் ராமசாமியால் பரபரப்பு
Published on

தஞ்சாவூர்,

தி.மு.க. விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். மு.க.ஸ்டாலினை வரவேற்று தஞ்சை புதிய பஸ் நிலைய பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தஞ்சையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தஞ்சை புதிய பஸ் நிலையம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் தி.மு.க. சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தவுடன் காரை நிறுத்தும்படி அவர் தனது டிரைவரிடம் கூறினார்.

உடனே காரில் இருந்து கீழே இறங்கிய டிராபிக் ராமசாமி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேனர்களை அகற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. பின்னர் காரில் ஏறி டிராபிக் ராமசாமி புறப்பட்டபோது மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் கபடி போட்டி தொடர்பாக பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அவர், காரில் இருந்து கீழே இறங்கி அவற்றை அகற்றும்படி கூறியதை தொடர்ந்து போலீசார் அந்த பேனரையும் அகற்றினர்.

அந்த நேரத்தில் விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் வந்த காருக்கு முன்னால் சென்ற தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த டிராபிக் ராமசாமியை பார்த்து கை அசைத்து விட்டு சென்றனர். காரில் சென்ற மு.க.ஸ்டாலினை பார்த்து டிராபிக் ராமசாமி கை அசைத்தார். அவரும் பதிலுக்கு டிராபிக் ராமசாமியை பார்த்து புன்னகையுடன் கை அசைத்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com