தெருவிளக்கை சீரமைத்தபோது மின்சாரம் தாக்கி கம்பத்தில் தொங்கிய தொழிலாளி பொதுமக்கள் மீட்டனர்

ஆரல்வாய்மொழி அருகே தெருவிளக்கை சீரமைத்தபோது மின்சாரம் பாய்ந்து கம்பத்தில் தொங்கிய தொழிலாளியை பொதுமக்கள் மீட்டனர்.
தெருவிளக்கை சீரமைத்தபோது மின்சாரம் தாக்கி கம்பத்தில் தொங்கிய தொழிலாளி பொதுமக்கள் மீட்டனர்
Published on

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. தோவாளை மின்வாரியத்தில் தேவையான பணியாளர்கள் இல்லை என்றும், அதனால், கிராமப்புறங்களில் மின் விளக்குகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஊராட்சி சார்பில் தினக்கூலி தொழிலாளர்களை நியமித்தனர். இந்த தொழிலாளர்கள் எரியாத விளக்குகளை மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் தொழிலாளரான மேக்காமண்டபம் ஈத்தவிளையை சேர்ந்த ஜினுமோகன் (வயது 22) என்பவர் தோவாளை கமல்நகர் பகுதியில் மெயின்ரோட்டை ஒட்டியுள்ள மின்கம்பத்தில் விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அவருடன் மற்றொரு தொழிலாளரும் உடன் இருந்தார்.

அப்போது அப்பகுதி முழுவதும் மின்சாரத்தை துண்டித்து விட்டு பணியில் ஈடுபட்டனர். மின்கம்பத்தில் பணியில் மும்முரமாக ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த உயர்அழுத்த மின்கம்பி ஜினுமோகன் தலையில் உரசியது. இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. உடனே ஜினுமோகன் மின்கம்பத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு கீழே இருந்த மற்றொரு தொழிலாளி, மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, உயர் அழுத்த மின்சார இணைப்பை துண்டித்தனர். உடனே அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மின்கம்பத்தில் தொங்கிய தொழிலாளியை மீட்டனர்.

பின்னர், அவரை தேரேக்கால்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜினு மோகன் தினகூலியாக நேற்றுதான் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த முதல் நாளிலே அவர் விபத்தில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com