

சென்னை,
சென்னையை அடுத்த நங்கநல்லூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முகிலன். இவர், வீட்டை காலி செய்துவிட்டு மரக்காணத்தில் குடியேறுவதற்காக தனது வீட்டு உபயோக பொருட்களை ஒரு மினி வேனில் ஏற்றி அனுப்பி வைத்தார். மினி வேன், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மரக்காணம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் செல்லும்போது மினிவேனின் பேட்டரி செயல் இழந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. உடனடியாக டிரைவர் சரத்குமார் (வயது 27) மினிவேனில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதுபற்றி அவர் மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மினிவேன் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதில் வேனில் கொண்டு செல்லப்பட்ட பீரோ, கட்டில், குளிர் சாதன எந்திரம், கிரைண்டர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.
பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். மினி வேன் உள்ளிட்ட சேதமான பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.