பொங்கல் பரிசு ரூ.1,000 எப்போது கிடைக்கும்? புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில்

பொங்கல் பரிசாக மக்களுக்கு அரசு வழங்க திட்டமிட்டுள்ள ரூ.1,000 எப்போது கிடைக்கும்? என்பதற்கு நாராயணசாமி பதில் அளித்தார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
Published on

தொடர் போராட்டம்

புதுவை சட்டசபை வளாகத்தில் நேற்று 2-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமியை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளோம். அப்போது கவர்னர் எந்தெந்த முறையில் கோப்புகளை தடுத்து நிறுத்துகிறார் என்பது குறித்து மக்களுக்கு விளக்கினோம். எந்தவித அதிகாரமும் இல்லாமல் மக்களை அவமதிக்கும் வகையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து

சர்வாதிகாரமாக நடக்கிறார்.

பொங்கல் திருநாள் தமிழர்கள் திருநாள். இதை தமிழர்கள் விமரிசையாக கொண்டாடுவார்கள். பொதுமக்களுக்கு இடையூறு தரக்கூடாது என்பதற்காக எங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். பொங்கலுக்கு பின் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்.

நிவர்த்தி செய்ய...

அமைச்சர் கந்தசாமி தனது துறைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள 15 கோப்புகள் தொடர்பாக சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு கோப்பு அனுப்பினால் அதை கவர்னர் மாற்றி செயல்படுகிறார்.

இந்த கோப்புகள் தொடர்பாக தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளரை அழைத்து பேச உள்ளேன். எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம் என்பதை பார்த்து அதை உடனே நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட உள்ளேன்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை செலவு செய்ய கவர்னர் அனுமதிப்பதில்லை. திட்டங்களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவருக்கு இல்லை. இந்த திட்டங்களுக்கு எல்லாம் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பரிசு

இதன்பின் நாராயணசாமியிடம் பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்ட தொகை எப்போது கிடைக்கும்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, இதுதொடர்பாக நிதித்துறை செயலாளரை அழைத்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com