முண்டியம்பாக்கத்தில் தொடர் விபத்துகள் நடக்கும் இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

முண்டியம்பாக்கம் அருகே தொடர் விபத்துகள் நடந்து வரும் இடத்தை போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முண்டியம்பாக்கத்தில் தொடர் விபத்துகள் நடக்கும் இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
Published on

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம், சர்க்கரை ஆலை பிரிவு சாலையில் நேற்று முன்தினம் இரவு கரும்புலோடு ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர் சாலையை கடந்தது. அப்போது விழுப்புரம் பகுதியில் இருந்து விக்கிரவாண்டியை அடுத்த ஆவுடையார்பட்டுக்கு பிறந்த நாள் விழாவிற்கு வந்த ஒரு வேன், டிராக்டர் மீது மோதியதில் வேனில் இருந்த சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்தாள். மேலும் வேனில் இருந்த 22 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொடர்ந்து விபத்து நடக்கும் இடமாக இப்பகுதி உள்ளதாகவும், விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இப்பகுதியில் விபத்துகளை தடுக்க உடனடியாக ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கவும் மற்றும் வெளிச்சத்திற்காக எல்.இ.டி. விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன், வளவனூர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரசுப்பிரமணியன், ஆம்ஸ்ட்ராங், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவடிவேலன், சுங்கச்சாவடி மைய மேலாளர் முத்துஅண்ணாமலை, துணை மேலாளர் சொர்ணமணி, செய்தி தொடர்பாளர் ராஜசேகர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com