அடுத்த ‘சானியா’ யார் ?

சானியா மிர்சா... டென்னிசில் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை. இந்திய பெண்கள் டென்னிசில் புரட்சியை ஏற்படுத்திய ஐதராபாத் தாரகை.
அடுத்த ‘சானியா’ யார் ?
Published on

டென்னிசில் ஒற்றையர் பிரிவில் பெரிய அளவில் ஜொலிக்காவிட்டாலும், இரட்டையர் பிரிவில் கோலோச்சி காட்டினார். 6 கிராண்ட்ஸ்லாம் (3 பெண்கள் இரட்டையர், 3 கலப்பு இரட்டையர்) பட்டங்கள் வென்றுள்ள அவரது சாதனை மகுடத்தில் சுவிஸ் புயல் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து தொடர்ச்சியாக 41 ஆட்டங்களில் வெற்றி கண்டது முத்தாய்ப்பாக அமைந்தது. உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுகளிலும் வெற்றிமாலை சூடிய பெருமைக்குரியவர் இவர்.

சானியாவின் நீண்ட கால ஏக்கம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான். ஆனால் 2008, 2012, 2016 ஆகிய மூன்று ஒலிம்பிக்கிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கலப்பு இரட்டையர் பிரிவில் சானியாவை யாருடன் கூட்டணி சேர்ப்பது என்பதில் டென்னிஸ் சங்கம் எடுக்கும் சர்ச்சைக்குரிய முடிவுகள் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் சானியாவை வெகுவாக பாதித்தது உண்டு.

இனி அவரது ஒலிம்பிக் பதக்க கனவு நனவாகுமா? என்பது சந்தேகம் தான். 31 வயதான சானியா மிர்சா இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அக்டோபர் மாதத்தில் அவரது வீட்டில் தொட்டில் அசைந்தாடும். குழந்தை பெற்றுக் கொண்டு சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் டென்னிஸ் களம் பதிக்க சானியா ஆர்வமாக இருந்தாலும், முன்பு போல் மின்னல் வேகத்தில் அவரால் செயல்பட முடியுமா? என்பது ஐயம் தான். ஏற்கனவே கால்முட்டி காயமும் அவருக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது.

டென்னிசில் 10 ஆண்டு கால அவரது ஆதிக்கம் முடிவுக்கு வரும் நிலையில் இந்தியாவின் அடுத்த சானியா யார்? அவரது இடத்தை இட்டு நிரப்பும் அளவுக்கு திறமைசாலிகள் நம்மிடம் இருக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தியாவில் திறமையான சில வீராங்கனைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தாண்டி, பிரார்த்தனா தோம்ப்ரே ஆகியோரை குறிப்பிட்டு சொல்லலாம். இவர்கள் தான் இந்திய டென்னிசின் வருங்கால தூண்கள். இப்போது இவர்களுக்கு 23, 24 வயது ஆகிறது. இவர்களின் ஆட்டத்தை அவர்களுடைய 16, 17 வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். இவர்கள் தான் அடுத்த சானியாவுக்கான ரேசில் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கணித்து ஆரூடம் சொல்கிறார், சானியா மிர்சா.

இவர்களில் அங்கிதா ரெய்னா தான் புதிய நட்சத்திரமாக பிரகாசிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குஜராத்தில் பிறந்தவரான அங்கிதா ரெய்னா இளசுகளுக்கு நடத்தப்படும் ஐ.டி.எப். டென்னிசில் 18 பட்டம் (6 ஒற்றையர், 12 இரட்டையர்) கைப்பற்றி இருக்கிறார். அண்மையில் பெட் கோப்பை டென்னிசிலும் சிறப்பாக ஆடினார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் 194-வது இடம் வகிக்கும் அங்கிதா ரெய்னா தனது வாழ்க்கையில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் (பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று) விரைவில் விளையாட உள்ளார்.

அது மட்டுமின்றி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளோருக்கான பட்டியலில் அங்கிதா ரெய்னா புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். சானியாவை போல் அங்கிதா ரெய்னாவும் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் வெற்றிகரமாக ஒரு ரவுண்ட் வலம் வருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

-ஜெய்பான்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com