

சேலம்,
சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பிரேமா (வயது 25). இவர்களுக்கு அஜய் (3) என்ற மகன் இருந்தான். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கண்ணன், தான் குத்தகைக்கு விவசாயம் பார்த்து வந்த தோட்டத்தில் கிணற்று மோட்டாரை சரி செய்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த பிரேமா, மாமியார் மாரியம்மாள், நாத்தனார் பிரியா ஆகியோரது வீட்டிற்கு அருகில் மகனுடன் வசித்து வந்தார். மேலும், அவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் பிரியா, அருகில் உள்ள பிரேமாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு பிரேமா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பிரியா, சிறுவன் அஜய் எங்கே? என்று தேடி பார்த்தார். அப்போது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கியநிலையில் சிறுவன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், பிரேமா மற்றும் சிறுவன் அஜய் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேசமயம், பிரேமாவின் பெற்றோர் சின்னதம்பி, சின்னபொண்ணு மற்றும் உறவினர்கள் அங்கு வந்து பிரேமா மற்றும் அஜய் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
கண்ணன் இறந்தபின்பு பிரேமா தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், மாமியார் மாரியம்மாள் தடுத்து தனது வீட்டின் அருகில் குடிசையில் குடி வைத்துள்ளார். கண்ணன் இறந்தபோது அவர் விவசாயம் பார்த்து வந்த நிலத்தின் உரிமையாளர் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். அதனை பிரேமா மற்றும் மாரியம்மாள் தரப்பினர் பிரித்து கொண்டனர்.
பிரேமாவிடம் இருந்த பணத்தை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் தனது மகனை கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதோடு கணவர் இறந்த விரக்தியில் உயிர் வாழ்வதற்கு பிடிக்காமல் குழந்தையை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மாலையில் மகனுடன் சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்த பிரேமா, எதற்காக திடீரென மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.