ரே‌ஷன்கடைகளில் ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை நகல் கேட்டு பெறுவது ஏன்? வழங்கல் துறை உரிய விளக்கம் அளிக்க கோரிக்கை

மாவட்டத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும், கார்டுதாரர்களின் ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை ஆகிய நகல்களை கேட்டு பெறும் நிலை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால் மாவட்ட வழங்கல்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ரே‌ஷன்கடைகளில் ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை நகல் கேட்டு பெறுவது ஏன்? வழங்கல் துறை உரிய விளக்கம் அளிக்க கோரிக்கை
Published on

விருதுநகர்,

தமிழக அரசு ஏற்கனவே அனைத்து ரேஷன்கார்டுதாரர்களின் குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் ரேஷன் கடைகளில் இந்த ஆவணங்களின் நகல்களை பெற்று குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. ஒரு சில கார்டுதாரர்களின் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பொருட்கள் வாங்குபவர்களுக்கு பொருட்கள் வாங்கிய விவரம் குறித்து தகவல் அனுப்புவதற்கு செல்போன் எண்களும் கேட்டு

பெறப்பட்டுள்ளது. இதிலும் பல ரேஷன் கார்டு தாரர்கள் செல்போன்களை வழங்காத நிலை நீடிக்கிறது.

தற்போது மாவட்டம் முழுவதும் அனைத்து ரேஷன்கடைகளிலும் கார்டு தாரர்களின் ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை நகல்களை விற்பனையாளர்கள் கேட்டு பெறுகின்றனர். எதற்காக இந்த ஆவணங்கள் பெறப்படுகிறது என்று விவரம் கேட்டால் இதற்கான முறையான விளக்கம் அளிக்கப்படாமல் உயர் அதிகாரிகள் இந்த ஆவணங்களின் நகல்களை கேட்டு பெறச்சொல்லி உள்ளதாக தெரிவிக்கிறார்கள். பல கடைகளில் இந்த ஆவணங்களின் நகல்கள் தரப்படாவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்க இயலாது என்று தெரிவிக்கும் நிலையும் உள்ளது.

இதுதவிர சில தனி நபர்கள் பல பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று ரேஷன் கார்டுதாரர்களிடம் ஒரே அடையாள அட்டை வழங்குவதற்காக ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை நகல்களை தருமாறு கேட்கும் நிலையும் உள்ளது. சிலர் இந்த நகல்களை கொடுத்தாலும் பலர் இந்த நகல்களை தர மறுக்கும்போது தேவையற்ற பிரச்சினையும் ஏற்படுகிறது. இந்தநகல்களை பெறும்போதே நகல்களை பெறும் தனிநபர்கள் அதற்காக பணம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரேஷன்கார்டுதாரர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி ஒரு அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஏற்கனவே குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களிடம் தான் ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல்களை கேட்டு பெறச் சொல்லி உள்ளோம். இதுதவிர அனைவரிடமும் இந்த நகல்களை கேட்டு பெறசொல்லவில்லை. மேலும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை பெறுமாறு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் மட்டுமே தெரிவிக்குமாறு கூறி உள்ளோம். இதே போன்று ரேஷன் பொருட்கள் வாங்கியது பற்றி தகவல் தெரிவிக்கவும், செல்போன் எண்களை தராதவர்களிடம் செல்போன் எண்களை கேட்டு பெறுமாறு சொல்லி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வழங்கல்துறை அதிகாரிகள் ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் முறையான தகவல்களை தெரிவிக்காததால் வாக்காளர் அடையாள அட்டையையும் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுகுழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் வழங்கல்துறையினர் பொதுமக்களுக்கு முறையாக அறிவித்து இருந்தால் இந்த குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

எனவே பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் மாவட்ட வழங்கல்துறையினர் ரேஷன் கடைகளில் எந்தெந்த ஆவணங்களின் நகல்களை எதற்காக ஒப்படைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிவிப்பதுடன் ரேஷன் கடைகளில் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை வழங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் முறையாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ரேஷன் கடை விற்பனையாளர்களும் இதற்காக பொருட்களை வழங்க இயலாது என்று தெரிவிப்பதை தவிர்க்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com